அதிக அளவில் ஐஸ் டீ குடிப்பவர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சிறுநீரகங்களில் கற்கள் உருவாகுவதற்கு தொடர்ந்து ஐஸ் டீ குடிப்பதும் ஒரு முக்கியமான காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதற்கு ஐஸ் டீயில் அதிகமாக ஆக்சலேட் என்னும் திடப்பொருள் கலவை இருப்பதே காரணமாகும். இது சிறுநீரக கற்களை உருவாக்கும் மூல வேதியல் பொருள் என அறியப்பட்டுள்ளது.
இவை சிறுநீரில் உப்பாகவும், தாதுக்களாகவும் தேங்கி நின்று சிறுநீரக கற்களை உருவாக்குகின்றன என்று சிகாகோவில் உள்ள லயோலா மருத்துவ கல்லூரியின் சிறுநீரக இயல்துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ஜான்மில்னர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் கூறுகையில், தண்ணீரை விட சுவையாகவும், குறைந்த கலோரிகளை கொண்டதும் என்பதற்காக ஏராளமான மக்கள், அதிகமாக ஐஸ் டீயை பருகும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் சிறுநீரகத்திற்கு ஏற்படும் பாதிப்பை ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்துக் கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுநீரக கல் அடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதுதவிர சிறுநீரக கற்களின் வளர்ச்சியை எலுமிச்சைப் பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் கட்டுக்குள் வைக்கும்.
எனவே எலுமிச்சை ரசம், ஜூஸ், பார்லி போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் ஆகியவற்றை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் சிறுநீரக நோய்களில் இருந்து விடுபட முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.