கமராக்களின் வியாபிப்பும், அதன் துல்லியமான படமெடுக்கும் திறனும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அண்மையில் வெளியான iPhone 4 கூட HD நிலையிலமைந்த வீடியோவை மிகவும் இயல்பாகவே எடுத்துவிடும் சாத்தியத்தை கொண்டிருக்கிறது. இவ்வாறான திறன்களைக் கொண்ட கமராக்கள் மூலம் நிழற்படங்களை எடுக்கின்ற பொழுது, அதன் அளவு மற்றும் துல்லியத் தன்மை மிகவும் உயர்ந்தளவில் காணப்படும்.
இவ்வாறான நிழற்படங்களை அப்படியே இணையத்தளத்தில் பதிப்பித்துவிட முடிவதில்லை. ஒரு பதிவிற்கிடையில் மிகப்பெரிய அளவிலான நிழற்படங்களை செருகச் செய்வதும் பொருத்தமான விடயமாகாது. Big Picture என்கின்ற நிகழ்வுகள் பற்றிய செய்தியை துல்லியமான நிழற்படங்களால் தொகுத்துத் தரும் தளம் தனது தளவடிவமைப்பை பெரிய அளவான நிழற்படங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைத்துள்ளதையும் கவனிக்க வேண்டும்.
மைக்ரோசொப்ட் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள Zoom.it என்கின்ற இணையச் சேவை மூலமாக மிகப் பெரிய நிழற்படங்களையும், சிறிய இடத்தினுள் செருகிக் காட்சிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயனர்களால், நிழற்படங்களை Zoom செய்து பார்க்கும் வாய்ப்பு மிகவும் சுலபமாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நிழற்படத்தினது, இணைய முகவரியை வழங்கும் போது, அதனை Zoom செய்து பார்க்கும் இடைமுகத்தை மிக அழகாக Zoom.it சேவை செய்து தருகின்றது. இங்கு வழங்கப்படும் இடைமுகத்தின் இணைய முகவரியை பகிர்ந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், குறித்த இணைய இடைமுகத்தை எமது வலைப்பதிவுகளிலும் Embed செய்து செருகிக் கொள்ளும் வாய்ப்புக் கூட வழங்கப்பட்டுள்ளது.