ஆங்கில மொழியே இணையத்தின் மிகவும் பிரபல்யமான மொழியாக, இன்றளவிலும் காணப்படுகிறது. நாளாந்தம் ஆங்கில மொழியில் கருமமாற்றும் 550 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இணையத்தில் உலாவந்து கொண்டேயிருக்கின்றனர். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் சீனா மொழியைப் பயன்படுத்தும் 36 மில்லியன் புதிய பயனர்கள் இணையத்துடன் இணைந்து கொண்டார்கள். இதனடிப்படையில், சீன மொழியை இணையத்தின் அடைவில் பாவிக்கின்றவர்களின் எண்ணிக்கை 440 மில்லியனைத் தற்போது தாண்டியிருக்கிறது.
இணையப் பரப்பில் இரண்டாவது அதிகளவில் பாவிக்கப்படுகின்ற மொழியாக ஏற்கனவே உருவெடுத்துள்ள சீன மொழியின் இணையப் பரப்பிலான வளர்ச்சி வருகின்ற வருடங்களில் மிகவும் அதிகரித்தே காணப்படும் என எதிர்வுகூறலாம். எது எப்படியாயினும் மேற்குலக நாடுகளோடு ஒப்பிடுகையில், இணைய உட்கட்டமைப்பு வசதிகளில், சீனா பின்தங்கியிருப்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே!
The Next Web, தளத்தின் ஆய்வின்படி, சீன மொழியானது, இணையத்தில் பாவிக்கப்படும் முதன்மையான மொழியாக வெறும் ஐந்து ஆண்டுகளுக்குள் மாறிவிடக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக எதிர்வு கூறப்படுகிறது.
இந்தச் தகவல்களைச் சொல்லுமாய்ப் போல் அமைந்த அழகிய தகவல்கள் நிறைந்த வரைபடமொன்றை அண்மையில் The Next Web வெளியிட்டது. கீழே அதனை வழங்கியிருக்கிறேன். அதன் பெரியளவான நகலை, குறித்த நிழற்படத்தை கிளிக் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இணையத்தின் மொழிப்பயன்பாட்டுப் பரம்பல் [மூலம்: The Next Web]
இந்தத் தகவல் கோலங்கள் பல விடயங்களைச் சொன்னாலும், அது சொல்கின்ற எதிர்காலம் பற்றிய செய்தி அர்த்தமானது. இணைய நிலைச்சூழலால் தோன்றியுள்ள தொடர்பாடல் முறைகள் எமது உலகத்தின் அர்த்தமான நிமிடங்களுக்கு அத்திவாரமிடுவதாய் அமைந்திருக்கிறது. மொழிகளின் விரிவாக்கத்தால், பல புதிய சிந்தனைகள் தோன்றத் தொடங்கும். அது மட்டுமல்லாமல், பாகுபடின்றி மொழிகள் பற்றி அறிவதற்கான தேட்டம் நிராசையாகவே மக்களிடம் உருவாகும் என்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை.
இந்த அடைவுகள் எல்லாம் எமக்குச் சொல்லும் செய்தி ஒன்றேயொன்றுதான், மனிதர்கள் என்ற நிலையில், நாம் மாற்றங்களோடு உலகின் பால் ஒவ்வொரு கணமும் வாழ்ந்திருந்தாலும், எல்லோருக்கும் பொதுவான, எல்லோரும் விரும்புகின்ற விடயங்களும் இருக்கவே செய்கின்றது என்பதாகும்.