உங்கள் இணையதளத்தின் ஆய்வுக்கு Google Analyticsஇனை பயன்படுத்துவது எப்படி ? இணைய உலகில் ஏராளமான இணையதளங்கள் செயல்படுகின்றன. நாமும் இணையதளம் வைத்திருந்தால் எப்படிச் செயல்படுகிறது, எங்கிருந்து வாசகர்கள் வருகிறார்கள், எந்தக் கட்டுரைகளை அதிகம் படிக்கிறார்கள், தினசை எத்தனை பேர் வருகிறார்கள் என்று ஆய்வு செய்வது அவசியமான விசயம். அப்போது தான் இணைய உலகில் மற்ற இணையதளங்களோடு போட்டியிட முடியும்.
கூகிள் நிறுவனத்தின் இலவச சேவையான கூகிள் அனலிட்டிக்ஸ் (Google Analytics) இணையதளம் நடத்துவோருக்கு சிறப்பாக உதவி செய்கிறது. நமது இணையதளம் எப்படிச் செயல்படுகிறது என்ற விவரங்களையும் வருகையாளர்களின் செயல்பாடுகளையும் கண்டறிந்து அறிக்கையாகக் கொடுக்கிறது.
கூகிள் அனலிட்டிக்ஸ் எப்படி ஆரம்பிப்பது?
முதலில் உங்களிடம் கூகிள் கணக்கு அல்லது ஜிமெயில் கணக்கு இருக்க வேண்டும்.
[You must be registered and logged in to see this link.] தளத்திற்குச் சென்று உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்தால் வலதுபுறம் Add a Profile என்ற பட்டன் இருக்கும். இதைக் கிளிக் செய்தால் உங்கள் இணையதளத்தைப்பற்றிய விவரங்களைக் கேட்கும்.
அதில் உங்கள் இணையதளத்தின் முகவரி மற்றும் நாட்டின் பெயரைக் கொடுத்து Finish கொடுத்தால் நமக்கான Tracking code எனச்சொல்லப்படும் தளத்தை ஆய்வு செய்வதற்கான நிரல்வரிகள் கொடுப்பார்கள். அதனை காப்பி செய்து கொள்ளவும். பின்னர் உங்கள் தளத்தின் நிரல்வரிகளுக்குச் (HTML code) சென்று என்ற வரிக்கு முன்பு பேஸ்ட் செய்து விட்டால் போதும். கூகிள் அனலிட்டிக்ஸ் சேவை 24 மணி நேரத்திற்குள் செயல்படத்துவங்கும்.
ஆய்வு செய்வது எப்படி?
இதற்குப்பின்னால் கூகிள் அனலிட்டிக்ஸ் சேவையில் நுழைந்தால் உங்கள் தளத்தின் செயல்பாடுகளான எத்தனை பேர் வந்துள்ளார்கள், எத்தனை பக்கங்கள் படிக்கப்பட்டுள்ளன போன்ற விவரங்கள் வரைபடத்துடன் காட்டப்படும். இடது புறத்தில் உள்ள மெனுவில் Visitors, Traffic sources, Content போன்றவை இணையதளத்தைப் பற்றி அதிக விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
1. Visitors – இதில் எத்தனை பேர், எத்தனை பக்கங்கள், சராசரியாக எவ்வளவு நேரம் இருந்தார்கள், எத்தனை பேர் புதிதாக வந்தவர்கள், எந்த உலவியைப் பயன்படுத்தினார்கள் போன்ற விவரங்கள் அறியலாம்.
2. Traffic sources – இதில் எங்கிருந்து வருகிறார்கள், எந்த இணையதளத்திலிருந்து இங்கெ வந்தார்கள், தேடுதளங்களிலிருந்து வந்தவர்கள், நேரடியாக வந்தவர்கள் போன்றவற்றை அறியலாம்.
3. Content – இதில் எந்தப்பக்கத்தை அதிகமாக படித்தார்கள், எந்தப்பக்கத்திலிருந்து வெளியேறினார்கள் போன்றவற்றை அறியலாம்.
மேலும் உள்ள வசதிகள்:
1. எந்த விவரங்கள் முன்பக்கத்தில் தெரிய வேண்டும் என்பதை Add to Dashboard என்பதில் சேர்க்க முடியும்.
2. இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட ஆய்வு விவரங்களை Date Range என்பதில் தேர்வு செய்து எளிதாகப் பார்க்க முடியும்.
3. ஒவ்வொரு விவரப்பட்டியலையும் வரைபட அமைப்பில் பார்த்துக் கொள்ள முடியும்.
4. நமக்கு வேண்டிய விவரங்களை கணிணியில் சேமிக்க இடப்புறம் உள்ள Export என்ற பட்டனைக் கிளிக் செய்து PDF,XML,CSV கோப்பாக சேமித்துக் கொள்ள முடியும்.
நன்றி: வணக்கம்.