கருவிலிருக்கும் குழந்தையின் வடிவம் ஓம்!
"ஓம்' என்னும் பிரணவ மந்திரத்திற்குள்ளே தான் இந்த அண்டமே அடங்குகிறது! வையத்திலுள்ளோரை வழிநடத்தி வாழ்வாங்கு வாழச் செய்வது இந்தப் பிரணவ மந்திரமே. கடவுள் முதல் கடைசிக் குடிமகன் வரை ஓங்கி ஒலிக்கும் வலிமை வாய்ந்த- மிக எளிமையான மந்திரம் "ஓம்'. இந்து மதத்தின் இரு கண்களாக விளங்கும் சைவம், வைணவம் இரண்டுமே... போற்றிடும் சக்தி வாய்ந்த பிரபஞ்ச மந்திரமாக இது திகழ்கிறது.
இந்த மந்திரத்தில் உயிர் இருப்பதால் இதைப் "பிரணவம்' என்கிறோம். பிரணவம், பிராணன் என்பதற்கெல்லாம் "உயிர்' என்பதே பொருள்.
"ஓம்' என்பதன் பொருள் என்ன? அதன் தத்துவம் என்ன? அதன் நிலைப்பாடு என்ன? எந்தெந்த தெய்வங்களை வேண்ட இந்த மந்திரத்தைச் சொல்ல வேண்டும்? இதனைச் சொல்வதால் அடையும் நன்மைகள் என்ன? யார் யாரெல்லாம் இந்த மந்திரத்தைச் சொல்லலாம்?
"ஓம்' என்பது "அ'கார "உ'கார "ம'கார எழுத்துகளின் சங்கமம். "ஓ' என்பது தமிழில் உயிர் நெடில்; "ம்' என்பது மெய் எழுத்து.
உயிரும் மெய்யும் (உயிர் + உடல்) சேர்ந்தால் ஒரு உயிருள்ள உடல் உருவாகின்றது. உயிர் இல்லாத உடல் பிணம்; மெய் (உடல்) இல்லாத உயிர் (ஆன்மா) ஆவி.
"ஓம்' என்பது உயிரும் உடலும் இரண்டறக் கலந்த உயிருள்ள உடல் போன்றது. அதாவது முழுமையானது; பரிபூரணமானது. பூரணம் என்றால் பூஜ்ஜியம் என்பதையே குறிக்கும். பூஜ்ஜியம் என்றால் ஒன்றுமே இல்லை என நாம் நினைக்கிறோம். ஆனால் பூஜ்ஜியம் இல்லா விட்டால் எதுவுமே இல்லை. இந்தப் பிரபஞ்சமே பூஜ்ஜியம்தானே! "ஓம்' என்பது உயிராகி உடலை இயக்குவது! துடிப்புடன் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது.
"ஓம் பூர்ண மதஹ் பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமே வா வசிஷ்யதே