மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா?
மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா?
சற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி? நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது.
தற்காலிக நினைவு மற்றது நிரந்தர நினைவு. நினைவுகள் யாவும் மூளையில் நரம்பு செல்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு டெலிபோன் நம்பரைக் கேட்டதும் அதற்கான ஒரு நரம்புக்கூட்டம் உடனே அதைப் பதிவு செய்வதில் முனைகிறது.
இந்த நரம்புக்கூட்டத்தை "ட்ரேஸ்' என்று (Trace)கூப்பிடுகிறார்கள். நமக்கு தற்காலிக நினைவுக்கென்று ஒரு ட்ரேஸும் அதே சமயம் நிரந்தர நினைவுக்கென்று இன்னொரு ட்ரேஸும் ஒரே சமயத்தில் மூளையில் உருவாகிறது.
மூளையில், தற்காலிக ட்ரேஸானது காம்மா கதுப்பிலும் நிரந்தர ட்ரேஸ்கள் ஆல்ஃபா பீட்டா என்ற கதுப்பிலும் காணப்படுகின்றன. இதே அமைப்பு ஈக்களிலும் காணப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஒரு சம்பவத்தை அல்லது தகவலை முதல் முறையாக கேட்கும்போது அல்லது படிக்கும்போது அது இரண்டுவித டிரேஸிலும் பதிகிறது. தற்காலிக டிரேஸ் வேகமாக உருவானாலும் அது உடனே கலைந்து விடுகிறது.
நிரந்தர டிரேஸ் மெல்ல ஆசுவாசமாக உருவாகிறது. அது முடிவடையவேண்டுமானால் மீண்டும் அதே சம்பவத்தை அல்லது படித்ததை நாம் அனுபவிக்க வேண்டும். நிரந்தர டிரேஸ் நரம்புக்கூட்டம், இரண்டாம் முறை, மூன்றாம் முறை தூண்டப்படும்போது அதன் டிரேஸ் முற்றுப்பெறுகிறது. முற்றுப் பெற்றதும் அது நிரந்தர நினைவாகிவிடுகிறது.
தற்காலிக டிரேஸ் எத்தனை முறை தூண்டப்பட்டாலும், அது உடனே கலைந்துவிடுகிறது. ஈக்குக்கூட தற்காலிக, நிரந்தர நினைவுகள் இருக்கிறது என்று கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வுக்கூடத்தின் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ஈயை சின்னக் குழாயில் வைத்து அதில் கெட்ட நாற்றமுடைய காற்றை அனுப்பும்போது கூடவே லேசாக மின்சார ஷாக் கொடுப்பார்கள். அதற்கப்புறம் ஈக்கு ஷாக் கொடுக்கும்போதெல்லாம் துர்நாற்றக் காற்றை அந்த ஈ எதிர்பார்க்கும். அல்லது துர்நாற்றக் காற்று வரும்போதெல்லாம் ஷாக் அடிக்குமோ என்று அஞ்சும்.
ஈயின் காம்மா கதுப்பிலும் ஆல்ஃபாபீட்டா கதுப்பிலும் இந்த அனுபவம் பதிகிறது என்று தெரிந்துகொண்டனர். நுட்பமான கத்தி மூலம் இந்த கதுப்புகளை ஒவ்வொன்றாக வெட்டி நீக்கும்போது அதற்கேற்ப தற்காலிக அல்லது நிரந்தர நினைவுகள் மறைவதைக் கவனித்தனர். ஒரு படி மேலே சென்று, நிரந்தர நினைவினை சேமிக்க உதவும் என்ஸைமினையும் அதற்கான ஜீனையும் கண்டுபிடித்தனர்.
என்ன ஆச்சரியம்! மனிதர்களுக்கும்கூட அதே ஜீனும் அதே என்ஸைமும் இருக்கிறது. நினைவினை சேமிக்கும் தந்திரம் ஈயில் தோன்றி பின் மனிதன் வரை வளர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது.
மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்கும் ஒரு சேதி எதை நீங்கள் நிரந்தரமாக நினைவில் பதித்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை முதலில் தற்காலிகமாக நினைத்துப் பாருங்கள் மீண்டும் அதை மறுபடி மறுபடி மூன்று முறையாவது கொஞ்ச நேரம் இடைவெளிவிட்டு நினைவுகூட்டிப் பாருங்கள் அப்புறம் அது மறக்கிறதா என்று பாருங்கள். மறக்க மாட்டீர்கள் அதற்கு நான் கியாரண்டி.