பிளாஷ் ட்ரைவினை டிபிராக் (defrag) செய்திட வேண்டுமா? பிளாஷ் ட்ரைவினை டிபிராக் (defrag) செய்திட வேண்டுமா? எனக் கேட்டால் பிளாஷ் ட்ரைவினை எந்த நிலையிலும் டிபிராக் செய்யக் கூடாது.
அதிகமான கொள்ளளவில் பிளாஷ் ட்ரைவ்கள் வரும் இந்த நாளில் இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம்.
இதற்கான விளக்கம் இதோ: முதலில் ஹார்ட் ட்ரைவ்களைப் பற்றிப் பார்க்கலாம். ஹார்ட் டிஸ்க்கில் நாம் பதியும் பைல்களெல்லாம், சிறு சிறு துண்டுகளாகப் பதியப்படுகின்றன.
பெரும்பாலும் இவை 512 பைட் அளவுள்ள குழுவாக இருக்கும். எனவே ஒரு பைல் என்பது 512 பைட் அளவுகளில் உள்ள பல குழுக்களாகும்.
இவை வரிசையாக அடுத்தடுத்து பதியப்படுவதில்லை. எனவே பைல்கள் அனைத்தும் ஒரே கோர்வையாகப் பதியப்படாமல், ஹார்ட் டிஸ்க் எங்கும் சிதறிக் கிடக்கும்.
இவற்றை ஓரளவிற்கேனும் ஒருங்கிணைக்க நாம் டிபிராக்கிங் வேலையை மேற்கொள்கிறோம். (ஆங்கிலத்தில் fragment என்பது ஒரு துண்டினைக் குறிக்கும். எனவே defrag என்பது அவற்றை ஒழுங்குபடுத்தி அடுக்குவதாகும்.)
செயல்பாட்டினை நாம் மேற்கொள்கையில், ஹார்ட் டிஸ்க்குடன் இணைக்கப்பட்டிருக்கும் படித்து எழுதும் ஹெட், பைல் துண்டுகளைப் படித்து, வரிசையாக அடுக்குகிறது.
இதனால் பைல் ஒன்றைத் தேடும் நேரம் கம்ப்யூட்டருக்குக் குறைகிறது. கம்ப்யூட்டரின் செயல்பாட்டு வேகத்தினை அதிகப்படுத்தவே, டிபிராக் மேற்கொள்ளப்படுகிறது.
அதனால் தான், டிபிராக் செய்வதை குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையேனும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.
இதற்கு மாறாக, பிளாஷ் ட்ரைவில் தகவல்களைப் படிக்க, எழுத தனி ஹெட் தரப்படுவதில்லை. எனவே பைல்களைத் தேடிப் பிடித்துப் படிக்க பிளாஷ் ட்ரைவ் அதிக நேரம் எடுப்பதில்லை. எனவே டிபிராக் இங்கு தேவைப்படுவதில்லை.
பிளாஷ் ட்ரைவினை டிபிராக் செய்யக் கூடாது என்பதற்கு இன்னொரு காரணம், அவ்வாறு செய்தால், அவை விரைவில் பயனற்றுப் போய்விடும் என்பதே.
எவ்வளவு அதிக முறை ஒரு பிளாஷ் ட்ரைவில் தகவல்களை எழுதுகிறோமோ, அவ்வளவு வேகத்தில் அவை பயனற்றுப் போய்விடும்.
மேலும் டிபிராக்கிங் என்பது மிகப் பெரிய வேலை. ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் தகவல் படிக்கப்பட்டு எழுதப்பட வேண்டும்.
எனவே பிளாஷ் ட்ரைவில் டிபிராக் செய்யக் கூடாது.