மனிதர்களுக்கு கிடைத்திருக்கும் மிகச்சிறந்த அரியதொரு பரிசு கணினி. பெரும்பாலான வேலைகள் தற்பொழுது கணினியைப் பயன்படுத்தி செய்து முடிக்கிறோம். எப்படியெனில் ஒரு வாகனத்தை இயக்குவது முதல்... சாதாரணமான தட்டச்சு வேலைகள் வரை இன்று அனைத்தையுமே கணினியின் மூலமே செய்து முடித்துவிடுகிறோம்.
குறிப்பாக செயற்கை கோள்களை உருவாக்குவது முதல் அவற்றை செலுத்தி, வானில் நிலைநிறுத்தி இயக்குவதை வரை அனைத்துமே கணினியின் மூலம்தான் செய்யப்படுகிறது. மிகப் பெரிய நிறுவனங்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களையும், கணக்குகளையும் கூட இது அநாயசமாக தீர்த்துவிடுகிறது. இத்தகைய பயன்மிக்க கணினியானது சில வேளைகளில் சிற்சில பிரச்னைகளையும் கொண்டுவரும். அவற்றை நாமே சரிசெய்து மீண்டும் கணினியை பழைய நிலைக்கு மீட்க முடியும். அதுபற்றியதொரு தொகுப்புதான் இந்த கட்டுரை. இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் குறிப்புகளைக் கொண்டு சிறிய சிறிய பிரச்னைகளை நீங்களே தீர்த்துவிடலாம்.
கணினி தொடக்கம் அடங்கவில்லையா? உங்கள் கணினியை தொடக்க முடியவில்லை எனில் அதற்கு முக்கியமான காரணம் மின் தொடர்பு அற்று இருப்பதுதான். முதலில் கணினிக்கு வரும் மின்சார வயர்களின் தொடர்ச்சி சரியான இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்யுங்கள். கணினியோடு இணைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்குகளையும் சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துவிட்டு, ஏதேனும் பிளக்குகள்(plugs) சரியாக பொருந்தாமல் இருப்பின் அவற்றை நன்றாக அழுத்தி விடவும். உங்களுடைய UPS -ல் ஆன் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை சோதிக்கவும். பிறகு UPS- சார்ஜ் ஆகியிருக்கிறதா என்பதை சோதித்துவிடுங்கள்.
கணனி தொடங்கிவிட்டது. ஆனால் வெற்றுத் திரை மட்டுமே தெரிகிறதென்றால்இதுவும் மற்றொரு வகையான மின்சாரப் பிரச்னையால் உருவாவதுதான். அதாவது கணினி திரைகள் சரியான போதுமான மின்சாரம் கிடைத்தால் மட்டுமே இயங்ககூடிய வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அச்சூழலில் உங்கள் கணினித் திரைக்கும் மின்சாரம் கிடைக்கவில்லை என்றாலும் கணினி திரையானது செயற்படாமல் போகும். எனவே கணினித் திரைக்கு செல்லும் மின்சாரத்தை சோதனை செய்யுங்கள்.
விண்டோஸ் தொடங்கவில்லை உங்களுடைய விண்டோஸ் இயங்குதளம் துவங்குவதில் பிரச்னை எனில் safe mode-ல் இயக்கிப் பார்க்கவும். safe mode - ல் இயங்குகிதெனில் System restore செய்து பின்பு இயக்கலாம். சேப் மோட் செல்ல உங்கள் கணினியை தொடக்கும்போது F8 அழுத்தி Safe Mode-ஐத் தேர்ந்தெடுக்கலாம்.
உங்களுடைய கணினி துவங்கவில்லை எனில் windows recovery disk மூலம் உங்கள் கணினியை மீண்டும் சரிசெய்து பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.
விண்டோஸ் தொடங்கிவிட்டது. ஆனால் மிக மெதுவாக இயங்குகிறதா?இந்த பிரச்னைகள் ஏற்பட பல காரணங்கள் உண்டு. பெரும்பாலும் கணினி வேகம் குறைவதற்கு வைரஸ், த்ரோஜன் போன்ற தீங்கிழைக்கும் நச்சு நிரல்வரிகளால் ஏற்படும். உங்கள் கணினியை Anti Virus கொண்டு Scan செய்து இவற்றை நீக்கிவிட்டலாம்.
பல Sart-up Program களும் கணினி மெதுவாக இயங்க காரணமாக அமையும். இதற்கு நீங்கள் Run விண்டோவில் msconfig கொடுத்து நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத புரோகிராம்களை (checking off)டிக் எடுத்துவிடலாம். OS பதியப்பட்ட டிரைவில் அதிகளவு இடம் இல்லாமையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். உங்கள் disk drive-ல் Properties சென்று நீங்கள் டிஸ்க் கிளீனப் செய்யலாம். தேவையில்லாத புரோகிராம் இருக்குமெனில் அதை நீக்கவிடலாம். இதன் மூலம் கணினி விரைவாக செயல்பட வாய்ப்பு ஏற்படும்.
மென்பொருள் இயங்கவில்லையா?உங்களுடைய மென்பொருள் காலாவதி ஆகியிருக்கலாம். ஒருவேளை அப்படி ஆகவில்லையெனில் மென்பொருளில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்க கூடும். அம்மென்பொருளை ஒரு முறை நீக்கிவிட்டு(Uninstall), பிறகு புதியதாக அந்த மென்பொருளை பதிந்து(Reinstall) பயன்படுத்தலாம்.
புறசாதனங்கள் (External device) செயல்படவில்லையா?சில நேரங்களில் கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும் அச்சு இயந்திரம் (Printer), வருடி (Scanner) புறச்சாதனங்கள் (External device) செயல்படாமல் போகும். இவ்வாறான சூழ்நிலையில் முதலில் அந்த சாதனங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும் வயர்களை ஒருமுறை எடுத்துவிட்டும் மீண்டும் பொருத்தி செயல்பட வைக்கலாம். மின்னிணைப்பை அளிக்கும் கம்பிகளை (Electrical wire)ஒரு முறை சோதிப்பது அவசியம்.
நெட்வொர்க் பிரச்னையா?நீங்கள் நெட்வொர்க் பிரச்னையை சந்தித்தீர்களென்றால் முதலில் உங்களுடைய ஹப்(HUB)ன் மின் இணைப்பையும், இணைத்திருக்கும் Adapter -ஐயும் சோதித்துப் பார்க்கவும். அவைகள் சரியாக இயங்கினால் உங்கள் ஐ.பி. அட்ரசை நீங்கள் உள்ளிட்டுப் பாருங்கள்.. இந்த இரண்டும் சரியாக இருந்தால் நிச்சயம் உங்கள் PCI ETHERNET card-ல் பிரச்னை இருக்கும். அவ்வாறான சூழலில் புதிய ஈதர்நெட் கார்ட் பயன்படுத்துவது அவசியம்.
இணைய இணைப்பில் பிரச்னையா?முதலில் உங்களுடைய கணினியுடன் உங்களுடைய இணைய இணைப்பு வழங்கும் மோடம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கவும். சரியாக இருந்ததெனில் அடுத்து அதற்கு சரியான மின்னிணைப்பு உள்ளதா என்பதை சோதிக்கவும். சில நேரங்களில் இணைய இணைப்பு வழங்கும் நிறுவனத்தில் ஏற்படும் பிரச்னையும் காரணமாக இருக்கலாம். அதனால் அவர்களைத் தொடர்புகொண்டு, ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காணலாம். சில நேரங்களில் பல்வேறு கணினிகள் ஒரே இணைய இணைப்பில் இணைந்திருக்கும்பொழுது IP conflict ஏற்பட்டு இணைய இணைப்பு தொடர்பு அறுந்து போகலாம். இந்த சூழல் ஏற்படும்பொழுது கணினியிலேயே ஒரு குறுஞ்செய்தி தோன்றும். அப்பொழுது கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை அகற்றி விட்டும் மீண்டும் இணைப்பதன் மூலம் இணைய இணைப்பை பெற முடியும்.
நன்றி - தங்கம்பழனி.