இமெயிலில் எத்தனையோ புகைப்படங்களை அனுப்பி வைத்திருப்பீர்கள்.எத்தனையோ முறை உங்களுக்கு இமெயில் வழியேபுகைப்படங்கள் வந்து சேர்ந்திருக்கும்.எத்தனை புகைப்படங்கள் வந்தன,யாருக்கெல்லாம் அனுப்பினோம் என்பதை கூட மறந்திருப்பீர்கள்!
ஆனால் இமெயில் அனுப்பிய அல்லது அனுப்பிவைக்கப்பட்ட படங்கள் இப்போது தேவை என்றால் என்ன செய்வீர்கள்?
ஜிமெயிலில் பழைய மெயில்களை தேடும் வசதி இருப்பதால் கடந்த கால மெயில்களில்
தேடிப்பார்க்கலாம்.இருந்தாலும் ஒவொரு மெயிலாக தேடி அதில் புகைப்படம்
இருக்கிறதா என்று பார்த்து அவற்றை சேமித்து வைப்பது என்பது தலை சுற்ற
வைத்துவிடும் தான்.
இப்படி இமெயிலில் புதைந்த பழைய புகைப்படங்களை தேடி
எடுக்கும் எண்ணமோ தேவையோ ஏற்பட்டால் உதவுவதற்காக என்றே ஒரு இணையசேவை
உருவாக்கப்பட்டுள்ளது.
லாஸ்ட்போட்டோஸ் என்னும் பெயரிலான அந்த சேவை இமெயில் தொலைந்த புகைப்படங்களை மீண்டும் தேடி எடுக்க உதவுகிறது.
வின்டோஸ் சார்ந்த செயலியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையை லாஸ்ட்போட்டோஸ்
தளத்தில் இருந்து டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவிக்கொள்ள
வேண்டும்.
அதன் பிறகு உங்கள் இமெயில் முகவரியை குறிப்பிட்டு
பாஸ்வேர்டையும் குறிப்பிட்டு உள்ளே நுழைய அனுமதித்தால் இந்த சேவை கடந்த கால
இமெயில்களில் அனுப்பிய மற்றும் வந்து சேர்ந்த புகைப்படங்களை எல்லாம் தேடி
எடுத்து அழகாக தொகுத்து தந்து விடும்.
சில புகைப்படங்கள் அளவில்
சின்னதாக,தம்ப்நைலாக மட்டுமே இருக்கும்.அத்தகைய புகைப்படங்களை தேட வேண்டாம்
என்று வடிக்கட்டச்சொல்லும் வசதியும் இருக்கிறது.அதே போல குறிப்பிட்ட
வடிவிலான புகைப்பட கோப்புகள் தேவை இல்லை என்றோ குறிப்பிட்ட காலத்திற்கு
முன் வந்த படங்கள் தேவை இல்லை என்றோ வடிக்கட்டிக்கொள்ளலாம்.
புகைப்படங்கள் தேடி எடுக்கப்பட்டு கொண்டிருக்கும் போதோ அந்த படங்கள் உங்கள் டெஸ்க்டாப்பிலும் காண்பிக்கப்படும்.
அந்த படங்களை அப்படியே கிளிக் செய்து பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற
சேவைகள் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக்கும் டிவிட்டரும்
இப்போது தானே பிரபலமாகி இருக்கின்றன.பேஸ்புக் வருவதற்கு முன் இமெயிலில்
தானே பெரும்பாலும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டிருப்போம்.அப்படி
பகிர்ந்து கொண்டு மறந்து விட்ட படங்களை இப்போது தேடி எடுத்து பேஸ்புக்கில்
பகிர்வது அருமையானது தானே.
இந்த புகைப்படங்கள் எல்லாம் உங்கள் டெஸ்க்டாப்பிலும் சேமித்து வைக்கப்படும்.அவற்றை அழகாக கோப்புகளில் பிரித்து வைத்துக்கொள்ளலாம்.
ஜிமெயில் உட்பட பல்வேறு இமெயில் கணக்குகளில் இந்த சேவை செயல்படுகிறது.
இமெயிலில் அனுப்பிய புகைப்படங்களை மீட்டெடுக்க விரும்புகிறவர்களுக்கு
இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.அதே போல புகைப்படங்கள் வாயிலாக கடந்த கால
நினைவில் மூழ்க நினைப்பவர்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக
இருக்கும்.புகைப்படங்களை மீட்டெடுப்பதோடு அதனை நண்பர்களோடு பகிர்ந்து
கொள்ளவும் கைகொடுப்பது இந்த சேவையின் சிறப்பம்சம்.
புகைப்படம் சார்ந்த சேவைகளில் மேலும் ஒரு பயனுள்ள சேவை.
இணையதள முகவரி;http://lostphotosapp.com/
நன்றி: இன்று முதல் தகவல்