இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியடையும்!– மத்திய வங்கி எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2011ல் 8.3 சதவீதமாகக் காணப்பட்ட இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 7.2 வீதமாகச் சரிவடையும் என மத்திய வங்கி ஏற்கனவே எதிர்வு கூறியிருந்தது.
வட்டி வீதம் அதிகரிப்பு, இலங்கை ரூபாவின் நாணயப் பெறுமதியில் சரிவு ஏற்பட்டமை, வர்த்தக மீதி பாதகமாக உள்ளதால் அதனை சீர்செய்வதற்காக இறக்குமதிப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமை போன்றவற்றால் இலங்கையின் பொருளாதாரம் 2012 இல் கடும் சரிவை எட்டும் என, நேற்று வெளியிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நுகர்வோர் விலையில் தளம்பல் ஏற்படும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத் தளம்பலானது 2011ல் 6.7 சதவீதமாகவும், அதற்கு முந்திய ஆண்டில் இது 6.2 சதவீதமாகவும் காணப்பட்டதுடன், இப் பொருளாதாரத் தளம்பல் 2012 இல் மேலும் அதிகரிக்கும் என மத்திய வங்கியின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், 2010 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.0 சதவீதமாகக் காணப்பட்டது. 2011ல் இந்த வளர்ச்சி வீதம் 8.3 சதவீதமாக அதிகரித்தது.
கடந்த ஆண்டில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்துக்கு பின்னான பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்ட வெளிநாட்டு முதலீடாக ஒரு பில்லியன் காணப்படுகின்றது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2010 இல் வெளிநாட்டு முதலீடு 516 மில்லியன் டொலர்களாக காணப்பட்டது.
இலங்கை மீதான வெளிநாட்டு முதலீடு, சாத்தியப்பாடான எல்லைக்கு கணிசமான அளவு கீழேயே இருக்கிறது.
இதனால், இலங்கை மேலும் புதிய வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் உள்ளீர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேலும் செயற்படுத்த வேண்டும்' எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.