புத்தக பிரியர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்
இணையத்தில் புத்தகம் படிக்க உதவும் தளங்களை பொருத்தவரை ரீட் எனி புக் தளம் சிறப்பாக உள்ளது.
புதிய புத்தக சேவை தளமான ஹாட் ப்ரி புக்ஸ் தளத்தை இதற்கு நிகரானது என்று சொல்ல முடியாவிட்டாலும் இணையத்தில் புத்தகம் படிக்க விரும்பினால் இந்த தளத்தையும் குறித்து வைத்து கொள்ளலாம்.
20 ஆயிரம் புத்தகங்களோடு அழைக்கும் இந்த தளம் அவற்றை இ புக் வடிவில் அப்படியே படிக்க உதவுகிறது. வடிவமைப்பில் பெரிதாக அலங்காரம் எல்லாம் இல்லாமல் மிக எளிமையாகவே இருக்கிறது. அந்த எளிமையும் பளிச் என கவரகூடிய ரகம் அல்ல.
புத்தகங்கள் வரிசையாக அட்டை படங்களோடு பட்டியலிடப்பட்டுள்ளன. டாப் டென் புத்தகங்கள், டாப் டென் எழுத்தாளர்கள் என தனித்தனியே பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றின் கீழே தனியே வகைகள் மற்றும் எழுத்தாளர்கள் என்ற அட்டவணையும் இருக்கிறது.
எந்த புத்தகத்தை கிளிக் செய்தாலும் அவற்றின் பக்கங்கள் அப்படியே நீள்கின்றன. நிச்சயமாக ரீட் எனி புக் வழங்கும் அழகான ரீடரோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை.
ரீட் எனி புக்கில் புத்தகங்களை படிக்க தனியே ரீடர் இருப்பதோடு அந்த ரீடரும் கிளிக் செய்தவுடன் பக்கத்திலேயே தோன்றும். இதனால் ஏற்படக்கூடிய வாசிப்பு அனுபவம் தொடர்ந்து படிக்க தூண்டும்.
அந்த வகையில் ஹாட் ப்ரி புக்ஸ் தளம் மிக சாதாரணமாக இருந்தாலும் இந்த தளத்திலும் அழகான ஒரு சேவை இருக்கிறது. எந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால் இந்த தளத்தில் அந்த புத்தகம் இருக்கிறதா என உடனே தேடிப்பார்த்து கொள்ளலாம்.
ஆனால் என்ன புத்தகத்தை படிக்கலாம் என்று தீர்மானிக்க முடியாத குழப்பம் இருந்தால் கவலையே வேண்டாம், ரேன்டம் பகுதியில் கிளிக் செய்தால் இந்த தளமாக ஒரு புத்தகத்தை தெரிவு செய்து அதன் பக்கங்களை படிக்க தருகிறது.
என்ன புத்தகம் வரப்போகிறது என்று தெரியாமல் கிளிக் செய்து விட்டால் காத்திருக்கும் போது ஏதாவது ஒரு புத்தகம் முன்வைக்கப்படுவது சுவாரஸ்யம் தானே.
சில நேரங்களில் வரிசையாக கிளிக் செய்து கொண்டே இருந்தால் அடுத்தடுத்து பல புதிய புத்தகங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் தரும் மற்றொரு வசதி இ புக் வடிவில் படித்து கொண்டிருக்கும் போது ஏதாவது வார்த்தை புரியாவிட்டால் அதன் மீது கிளிக் செய்தால் அதற்கான அர்த்தம் வந்து நிற்கிறது. இந்த தளத்தில் உள்ளவை அனைத்துமே ஆங்கில புத்தகங்கள் என்னும் போது இந்த அகராதி சேவை பயனுள்ளது என்பதை சொல்ல வேண்டாம்.
புரியாத சொற்களுக்கு பொருள் தேட அங்கும் எங்கும் அலையாமல் இங்கேயே தெரிந்து கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this link.]