வள்ளுவன் வரலாறு
திருவள்ளுவர் ஒப்பற்ற ஓர் உலகம்; அவர், வாழும் உலகத்தைத் தம்முள் கொண்டு, அவ்வுலகுக்காகத் தம் வாழ்வை ஒப்படைத்து, ஒப்பற்ற ஒரு நூலை ஆக்கிய பெருமகனார்.
திருவள்ளுவர் தமிழகத்தில் தோன்றியவர்; தமிழகத்தில் வாழ்ந்தவர்; ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘, ‘ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்‘, ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்‘ என்னும் இத்தகைய பெருநெறி பற்றியவர். இறைமை முதல் எல்லாம் பொதுமைக் கண் கொண்டு நோக்கியவர்: மாந்தரைத் தெய்வ நிலைக்கு ஏற்றும் மாணெறி படைத்த தெய்வர்.
திருவள்ளுவர் பன்மொழிப் புலமையர்: தம் காலத்து வழங்கிய நூற் பரப்புகளையெல்லாம் கண்டவர்; உலகியல், உயிரியல், உணர்வியல், உடலியல், குடியியல், படையியல், பொருளியல், தொழிலியல், அரசியல், மருத்துவ இயல், அருளியல், மெய்யியல் முதலாம் பல்வகை இயல்களில் திறமான புலமையுற்றவர்.
திருவள்ளுவர் இயற்கை இன்ப இல்வாழ்வை ஏற்று, அறவழி நின்று, பொருளீட்டி, இன்பந்துய்த்து, அறிவறிந்த நன்மக்களைப் பெற்று, எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு குடும்பக் கடமையும் நாட்டுக் கடமையும் நானிலக் கடமையும் சீருறச் செய்து சிறந்த செவ்வியர்.
சான்றோர்க்கு எந்நாடும் தம் நாடே என்றும், எவ்வூரும் தம் ஊரே என்றும், அறிவறிந்த நன்மக்கட்பேறு தம் பெற்றோரினும் இப்பேருலகுக்குப் பெருநலம் செய்யுமென்றும் உலகளாவிய பெருநெறி காட்டியவர்.
பெருமூதாளராக இலங்கிய நிலையில் தம் உண்மையறிவும் படிப்பறிவும் பட்டறிவும் மெய்யுணர்வுமாகிய எல்லாம் உலகை உய்விக்குமென்னும் அருளுள்ளத்தால் திருக்குறளை உலகுக்குத் தந்து தெய்வமாப் புகழ் எய்திய இறைமையர்.