சாய்பாபா அறையில் கோடி கோடியாக பணம், தங்கம்! புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள, சத்ய சாய்பாபாவின் அறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
அங்கு கோடி கோடியாக பணமும், தங்கம் மற்றும் வைர நகைகள் குவியல் குவியலாக இருந்துள்ளன.
சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் அவை கணக்கிடப்பட்டு, வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டன.
ஆன்மிக தலைவராக இருந்து, எண்ணற்ற சமூக சேவைகளை ஆற்றியவர் சாய்பாபா. உலகம் முழுவதும் பல கோடி பக்தர்களை கொண்ட சாய்பாபாவின் உடல் நிலை, கடந்த மார்ச் 28ம் தேதி மோசமடைந்தது.
அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சத்தியசாய் உயர் மருத்துவ அறிவியல் மையத்தில், அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருந்தும், சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 24ம் தேதி அவர் சித்தியடைந்தார்.
பிரசாந்தி நிலையத்தில், அவர் வசித்து வந்த பிரத்யேக அறையான யஜூர்வேதமந்திர், அவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நாட்களிலேயே பூட்டப்பட்டது.
அங்கு ஏராளமான தங்க நகைகளும், பணமும் இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து பலவித கருத்துகள் பக்தர்கள் மத்தியில் நிலவியது.
இதைத் தொடர்ந்து, சாய்பாபாவின் அறையை திறப்பது என, அறக்கட்டளை உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.
இந்நிலையில், ஒன்றரை மாதங்கள் கழித்து, நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் அந்த அறை திறக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், சத்யபாபா டிரஸ்ட்டின் உறுப்பினருமான பி.என்.பகவதி, செயலர் சக்ரவர்த்தி, எஸ்.வி.கிரி, வி.சீனிவாசன், சத்யபாபாவின் சீடரும், பாதுகாவலருமான சத்யஜித் ஆகியோர் முன்னிலையில் யஜூர்வேதமந்திர் திறக்கப்பட்டது.
இவர்களுடன், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஏ.பி.மிஸ்ரா, கர்நாடக ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வைத்தியானந்தா ஆகியோரும் அறைக்குள் சென்றனர்.
அவர்கள், அறையின் உள்ளே போனபோது, ஒவ்வொரு அறையிலும் , நகைகளும், பணமும் குவியல் குவியலாக இருந்தது தெரியவந்தது.
பணம் கட்டுக்கட்டாக இருந்துள்ளது. வைர நகைகளும் அதிகமாக இருந்துள்ளன. தங்க நகைகளை பொறுத்தமட்டில் மோதிரங்கள், சங்கிலிகள் மற்றும் தங்கக் கட்டிகளும் விலை மதிப்பு மிக்க கற்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
அங்கிருந்த பணம், நகைகளை கணக்கெடுத்து தனியாக பிரிக்கும் பணியில், சாய்பாபா அறக்கட்டளை கல்விக் கூடத்தில் பயிலும் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் வரவழைக்கப்ப்பட்டு, அவர்கள் பணத்தையும், நகைகளையும் மதிப்பீடு செய்தனர். இதற்காக, வங்கியில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்களை கொண்டு வந்து இருந்தனர்.
பணத்தையும், நகைகளையும் வங்கியில் டெபாசிட் செய்தனர். அறை திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து நிகழ்வுகளும், வீடியோவில் படமாக்கப்பட்டது.
பொதுமக்களோ, பத்திரிகையாளர்களோ யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர் ஆர்.ஜே. ரத்னாகர் நிருபர்களிடம் கூறுகையில்,
"யஜூர்வேதமந்திர் அறையில் இருந்த பணம், ஸ்டேட் பாங்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வைர நகைகளை மதிப்பீடு செய்யும் போது, வருமான வரித்துறையால் அனுமதிக்கப்பட்ட மதிப்பீட்டாளர் உடன் இருந்தார்,'' என்றார்.
எவ்வளவு பணம் இருந்தது, நகையின் மதிப்பு பற்றி அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.
நகை மற்றும் பணத்தை மதிப்பீடு செய்வதற்கு இரண்டு நாட்களானது.
வங்கி வட்டாரங்களில் கிடைத்த தகவல்படி, 98 கிலோ தங்க நகைகளும், 307 கிலோ வெள்ளி நகைகளும், ரூ.11 கோடியே 56 லட்சம் பணமும் இருந்ததாக கூறப்படுகிறது