பேஸ்புக்கில் இருந்து விடுபடுவது சுலபமானதல்ல பேஸ்புக் சமூக இணையத்தளம் வாயிலாக தங்களது தனிப்பட்டத் தரவுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கருதி பெரும் எண்ணிக்கையானவர்கள் அண்மைக் காலத்தில் அந்த இணையத் தளத்திலிருந்து விலகிக் கொண்டனர்.
பிரிட்டனில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேஸ்புக் பாவனையாணர்கள் அதிலிருந்து விலகிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் பேஸ்புக்கை நீங்கள் விட்டாலும் அது உங்களை விடப்போவதில்லை என்பதுதான் புதிய தகவல்.
பேஸ்புக்கில் இருந்து விலகிக் கொள்வதை “பேஸ்புக் தற்கொலை” என்று வர்ணிக்கின்றார்கள். இந்தத் தற்கொலையை செய்து கொள்வது நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு சுலபமானதல்ல. இதற்கு இரண்டு வழிகள் உண்டு.ஒன்று உங்கள் பேஸ் புக் பக்கத்தை செயல் இழக்க வைப்பது.
மற்றது அதை முற்றாக அழித்து விடுவது. நீங்கள் இதை செயல் இழக்க வைத்தால் அது உங்களுக்கு உங்களின் பேஸ்புக் நண்பர்களின் படங்களையும்,செய்திகளையும் மீண்டும் மீண்டும் ஈ மெயில் வழியாக அனுப்பி அவர்கள் உங்களைத் தேடுகின்றனர்.
உங்களோடு தொடர்பு கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்று தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் கலந்து கொள்ளாமல் தவற விடும் வைபவங்கள் பற்றியும் அதில் பங்கேற்கும் உங்கள் நண்பர்கள் பற்றியும் அது உங்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
இதன் மூலம் இந்தக் கொடிய பேஸ்புக்கின் பிடியிலிருந்து நீங்கள் மீளவும் முடியாமல்,ஒரு நிலையான முடிவுக்கும் வர முடியாமல் அது உங்களை நிலை குலையச் செய்யும்.
மேலும் நீங்கள் உங்கள் பக்கத்தை முழுமையாக அழித்து அதை கைவிட்டாலும் உங்கள் நண்பர்கள் அதில் தங்களுக்கு விருப்பமானவற்றை தொடர்ந்து தரவேற்றம் செய்ய முடியும். எனவே பேஸ்புக் கொடுமையிலிருந்து நீங்கள் விடுபட நினைத்தாலும் இப்போதைக்கு அது உங்களை விடுவதாக இல்லை.