முன்னோக்கி ஓடுவதை விட பின்னோக்கி ஓடினால் பலன் அதிகம்: ஆய்வுத் தகவல் நமது உடல் நன்றாக இருப்பதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரையை மருத்துவ நிபுணர்கள் கூறுவது உண்டு.
குறிப்பாக மெல்லோட்டம் போன்ற ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தற்போது ஆய்வாளர்கள் உடல் நலத்திற்கான புதிய முறையை தெரிவித்துள்ளனர்.
முன்பக்கமாக ஓடுவதை காட்டிலும் பின்னோக்கிய படி ஓடினால் உடல் நல்ல வலிமையுடன் இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பின்னோக்கி ஓடுவதால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் மிகுந்த வலிமையுடன் திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பக்கமாக ஓடி பயிற்சி செய்வதால் கால், கை மூட்டுகள் நன்றாக பலம் அடைகின்றன.
நமது பார்வைத்திறனும் கூடுதலாகிறது. முழங்கால் மற்றும் முதுகு பிரச்சனைகளுக்கு தீர்வு காண பின்னோக்கிய ஓட்டம் மிக சிறந்த பயிற்சியாக அறிவுறுத்தப்படுகிறது.
அமெரிக்காவின் ஓர்கான் பல்கலைகழக ஆராய்ச்சி முடிவின் படி முன்னோக்கி ஓடுவதில் செலவழிக்கப்படும் சக்தியில் 80 வீதம் பின்னோக்கி ஓடுவதில் பயன்படுத்துவதால் நல்ல உடல் தகுதி பலன்கள் கிடைக்கின்றன என தெரிவித்துள்ளது.
இதய ரத்தக் குழாய்கள் சீரான இயக்கத்திற்கு பின்னோக்கி ஓடுவது நல்ல பலனைத் தருகிறது என தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெலன்போஸ் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
முன்னோக்கி ஓடுவதில் ஆயிரம் அடிகளை எடுத்து வைக்கும் பயிற்சியின் பலனை பின்னோக்கி ஓடுவதில் 100 அடி வைப்பதன் மூலம் பெறலாம் என பிரிட்டன் பின்னோட்ட பந்தய அமைப்பாளர் ஜேம்ஸ் பாம்பர் கூறுகிறார்.